Monday, June 20, 2011

சென்செக்ஸிலிருந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் நீக்கம்!

மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸிலிருந்து அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த குழுமத்தின் முக்கிய நிறுவனங்களான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் பங்குகளுக்கு பதில், கோல் இந்தியா மற்றும் சன் பார்மா பங்குகளை பட்டியலிட்டுள்ளது பங்கு பரிவர்த்தனை மையம் பிஎஸ்இ.

வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிமுதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. இதனால் ஏற்கெனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா பங்குகளை வாங்கி வைத்திருப்போர் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எப்படியாவது தள்ளிவிட்டால் போதும் என விற்பனையில் இறங்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே, 2 ஜி முறைகேடுகளில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு தொடர்புள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், அதன் பங்குகள் பிஎஸ்இயிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்த அறிவிப்பின் மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை ரூ 95 ஆகக் குறைந்துவிட்டது. அதாவது ஒரேநாளில் 50 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இன்ப்ரா பங்கு மதிப்பும் 50 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது (முந்தைய விலை ரூ 580).

2006-ல் சென்செக்ஸில் இடம் பெற்றது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். அடுத்த சில மாதங்களில் அது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸிலிருந்து பிரிந்தது. டாடா பவர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அமர்ந்தது.

No comments:

Post a Comment