Tuesday, March 15, 2011

பங்குச் சந்தையில் ஃபுகுஷிமா எஃபெக்ட்... 330 புள்ளிகள் வீழ்ச்சி!

மும்பை: ஜப்பானிய அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்து வருவது, ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவிலும் இதன் பாதிப்பு இன்று பெருமளவு இருந்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் எடுத்த எடுப்பிலேயே 330 புள்ளிகள் சரிந்து, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

ஃபுகுஷிமாவின் மூன்றாவது அணு உலை நேற்று வெடித்ததுமே, அந்நாட்டின் பிரதமர் நோடோ கான், "ஜப்பானின் பூகம்பம் தாக்கிய பகுதிகளில் இருந்த அணு உலைகள் வெடித்துள்ளதால் கதிர்வீச்சு அளவு அபாயகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் நாடு மீண்டும் பொருளாதார மந்தத்துக்குச் செல்லும் ஆபத்து நேர்ந்துள்ளது," என்று அறிவித்தார்.

இதன் விளைவாக, ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பாதித்தது. ஜப்பான் பங்குச் சந்தையில் 12 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே, தைவான், ஷாங்காய், ஹாங்காங், பாங்காக் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.

இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸில் 330 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. நிப்டியில் 113 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

பிற்பகல் 12 மணிக்குப் பிறகு லேசான மீட்சி காணப்பட்டது. சென்செக்ஸ் 100 புள்ளிகள் முன்னேறியது. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் பெருமளவு வீழ்ச்சி கண்டன. சக்தித் துறை பங்குகளில் ஓரளவு முன்னேற்றம் தெரிந்தது.

No comments:

Post a Comment